தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை புயலுக்கு வாய்ப்பு? சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கஜா புயல் கடந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் எதிரொலியால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இது தொடர்ந்து வலுடைந்து வருவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் மீனவர்கள் தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.