ஸ்கைப் மற்றும் அலெக்ஸா மூலம் இலவச வீடியோ அழைப்பு எப்படி செய்யலாம்?
மைக்ரோசாஃப்ட் தனது விற்பனை இணையதளத்தில் அமேசான் அலெக்ஸா சாதனங்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் (Skype)சேவையை பயன்படுத்தும் வசதி அலெக்ஸா சாதனங்களில் கிடைக்கிறது.
ஸ்கைப் மற்றும் அலெக்ஸா மூலமாக உலகத்தின் எந்த பகுதியிலும் வசிக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். கைகளை பயன்படுத்தி சாதனங்களை இயக்காமலே உரையாட முடியும். அலெக்ஸா வசதி இணைந்த எக்கோ டாட் (Echo Dot) மூலம் அலெக்ஸா மற்றும் ஸ்கைப் வசதியுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். எக்கோ ஷோ (Echo Show) மற்றும் எக்கோ ஸ்பாட் (Echo Spot) மூலமாக கணினி மற்றும் அலைபேசியில் ஸ்கைப் வசதியுள்ளவர்களுடன் வீடியோ அழைப்பு மூலமாக பேச முடியும் என்று மைக்ரோசாஃப்ட்டின் ஸ்கைப் வலைப்பக்கத்தில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களை கையால் தொடாமல் ஒலி அழைப்பினை செய்வதற்கு எக்கோ டாட், ஒளி அழைப்பினை செய்வற்கு எக்கோ ஷோ அல்லது எக்கோ ஸ்பாட் சாதனத்திற்கு குரல் கட்டளை கொடுக்கலாம். இதற்கு ஸ்கைப் கணக்கினை அலெக்ஸாவுடன் இணைக்க வேண்டும். அமேசான் அலெக்ஸா செயலியில் Settings > Communication > Skype என்ற வழிமுறையை பின்பற்றி இணைக்கலாம். பின்பு மைக்ரோசாஃப்ட் பயனர் கணக்குக்கான விவரங்களை பயன்படுத்தி உள்நுழையலாம்.
"Alexa, call Dad on Skype அலெக்ஸா, ஸ்கைப்பில் அப்பாவை கூப்பிடு" மற்றும் "Alexa, Skype Mom அலெக்ஸா, அம்மாவை ஸ்கைப்பில் இணை" போன்ற கட்டளைகள் மூலம் இணைப்பினை பெறலாம். ஸ்கைப் 8.34 அல்லது அதற்கு பிந்தைய பதிப்புகளில் இந்த வசதி உண்டு.
அமேசான் எக்கோ (ஜென் 1), அமேசான் எக்கோ (ஜென் 2), எக்கோ பிளஸ் (ஜென் 1), எக்கோ பிளஸ் (ஜென் 2), அமேசான் டாட் (ஜென் 2), அமேசான் டாட் (ஜென் 3), அமேசான் ஷோ (ஜென் 1), அமேசான் ஷோ (ஜென் 2) மற்றும் அமேசான் ஸ்பாட் ஆகிய அலெக்ஸா சாதனங்கள் இதற்கு உகந்தவை.
தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் - ஐக்கிய ராஜ்ஜியம், அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளிலும் உள்ள இவ்வசதி விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது.
இந்தியாவிலுள்ளவர் மாதத்திற்கு 100 நிமிடங்கள் வீதம் இரு மாதங்களுக்கு சர்வதேச அழைப்பினை கட்டணமில்லாமல் செய்ய இயலும்.