வாட்ஸ் அப் இந்தியாவுக்கான தலைவர் நியமனம்

இந்திய அரசின் உத்தரவை தொடர்ந்து சமூக ஊடகமான வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவுக்கென ஒரு தலைவரை நியமித்துள்ளது.

சமூக ஊடகமான வாட்ஸ் அப் மூலம் பரவும் பொய்யான தகவல்கள் அல்லது போலி செய்திகள் மூலம் கும்பல் படுகொலை போன்ற சமுதாய கேடுகள் இந்தியாவில் நேரிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து இந்திய அரசு, இங்கு நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடும் தலைமை பொறுப்பில் ஒருவரை அமர்த்த வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

போலி மற்றும் பொய் செய்திகளை முடக்கவும், பதிவுகளை முதலாவது பகிர்ந்து கொள்பவர்களை அடையாளம் காணவும் தொழில்நுட்பங்கள் வேண்டும் என்றும் இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இந்திய அரசின் சார்பில் இதுவரை இரண்டு அறிவிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இரண்டாவது அறிவிக்கையில் வாட்ஸ் அப், பதிவுகளுக்கான போதுமான பரிசோதனை வசதி இல்லாமல் வதந்தி பரப்பும் ஊடமாக செயல்பட்டு வருவதால், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, வாட்ஸ் அப்புக்கு குறைதீர் அதிகாரி நியமிக்கப்பட்டார். தற்போது நாடு முழுவதுக்குமான தலைவராக அபிஜித் போஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈஸிடப் (Ezetap)என்னும் மின்னணு பணம் வழங்கும் நிறுவனத்தை 2011ம் ஆண்டு இணைந்து (co-founder)தொடங்கிய அபிஜித், அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் குருகிராம் (குர்ஹான்) பகுதியில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கென தனி பணியாளர் குழுவினை அபிஜித் போஸ் கட்டமைப்பார் என்று கூறப்படுகிறது. பெரிய மற்றும் சிறிய வணிகங்களை வாடிக்கையாளர்களுடன் இணைப்பதற்கான பணியினை அபிஜித் போஸ் தலைமையிலான குழுவினர் மேற்கொள்வர் என்று வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>