ரூ.15000 கோடி நிதி வழங்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!
தமிழகத்திற்கு புயல் நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கும்படி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜா புயலின் கோர தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் வரலாற்றில் காணாத பேரழிவை சந்தித்துள்ளது. பல மாவட்டங்களில் இன்னும் மின்சாரம் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும், கால்நடைகள் அழிந்தும் விவசாயகிள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்கள், விவசாயிகளுக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார்.கஜா புயலுக்கு பிறகு சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்கு பிறகு செவ்வாய் அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், சேத மதிப்பீட்டு அறிக்கையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 13 ஆயிரம் கோடி நிவாரண நிதி கோர முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். பின்னர் இன்று காலை பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, பிரதமரிடம் ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை பிரதமரிடம் எடுத்துக் கூறி, புயல் நிவாரணமாக ரூ.15000 கோடி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறோம். தற்போது, இடைக்கால நிவாரணமாக உடனடியாக 1500 கோடி ரூபாய் வழங்கும்படி கேட்டுக்கொண்டோம்.
தமிழகத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை அனுப்பி வைக்கவும் கேட்டுள்ளோம். விரைவில் ஆய்வு செய்து நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார்இவ்வாறு முதல்வர் கூறினார்.