இடைத்தேர்தல் ப்ளஸ் டெல்லியின் கஜா நிதி.. எடப்பாடி- மோடி சந்திப்பால் ஸ்டாலின் பீதி-Exclusive

இடைத்தேர்தல் பணிகளில் அதிரடியாகக் கால் வைக்கத் தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஜனவரியில் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வரும். திமுக கூடாரம் காலியாகப் போகிறது' என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

கஜா புயல் பாதிப்புகளால் 12 மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டரில் பறந்தபடியே ஆய்வு செய்யக் கிளம்பினார் முதல்வர். அவருடன் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பயணித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு முடித்துவிட்டு, தஞ்சைக்குக் கிளம்பத் தயாரானவருக்கு வானிலை ஆய்வு மையம் சிக்னல் கொடுக்கவில்லை.

பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டார். இதன்பின்னர், இன்று காலை பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார் எடப்பாடி. இந்த சந்திப்பு வழக்கம்போல அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைப் பற்றி அறிக்கை வெளியிட்ட தினகரன், ' நூற்றுக்கணக்கான கிராமங்களில், பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த அவர்களது நிலங்களையும், வீடுகளையும், கால்நடைகளையும், உடமைகளையும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட வந்து பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதல்வர் நிவாரண நிதியை கோர இருக்கிறார்? மிகப் பெரிய இயற்கை பேரிடர் நடந்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரண நிதி கோராதது ஏன்? இந்த சந்திப்பு அரசியல் காரணங்களுக்காகத்தான்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இச்சந்திப்பின் நிஜப் பின்னணி குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தோம். கஜா புயலுக்கான நிதி குறித்துத்தான் இந்த சந்திப்பில் பேசப்பட்டது. தமிழ்நாட்டுக்குக் கூடுதல் நிதி கிடைத்தால், அது தன்னுடைய அரசுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்க இருக்கிறார் எடப்பாடி.

இதைப் பற்றி மோடியிடம் தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. அதேநேரம், 20 தொகுதி இடைத்தேர்தலைப் பெரிதும் நம்பியிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஆர்.கே.நகரைப் போலக் கோட்டைவிடாமல் முழு அளவில் அரசு இயந்திரத்தைக் களமிறக்க இருக்கிறார் எடப்பாடி.

அரசாங்கம் கையில் இருப்பதால், 20 தொகுதிகளிலும் நல்ல வாக்குகளோடு சேர்ந்து வெற்றி பெற முடியும் எனத் திட்டமிடுகிறார் எடப்பாடி. இதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும் என விரும்புகிறார்.

இந்த 20 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. திமுக கூட்டணி இந்த 20 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தால், எடப்பாடி வலுவான தலைவராக மாறிவிடுவார். இந்தக் கணக்கையும் கவனித்து வருகிறார் ஸ்டாலின்.

நாடாளுமன்றத் தேர்தலோடு 20 தொகுதி தேர்தல் நடக்கும் என துரைமுருகன் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடியின் திட்டப்படி இடைத்தேர்தல் நடந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக அணிக்குத்தான் லாபம் என தலைமைக்குத் தெரியப்படுத்தியுள்ளனர் தமிழக பாஜக பிரமுகர்கள்.

டெல்லி சந்திப்பில் இடைத்தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. வரும் ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் பணிகள் நிறைவடையலாம்" என்றார்.

- அருள் திலீபன்

More News >>