வருகைப் பதிவுக்கு போலி விரல் ரேகை: விலை 4,000 ரூபாய்!

பொறியியல் கல்லூரியில் பணியாற்றுபவர்களின் வருகையை பதிவு செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக முறைகேட்டில் ஈடுபட்ட மூன்று பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது.

சரியாக வேலைக்கு வருகிறார்களா என்று கண்காணிக்கவும், பணிக்கு வராமல் வருகையை பதிவு செய்வதை தடுக்கவும் பயோமெட்ரிக் (biometric) என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கானா மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஊழியர்கள் பயோ மெட்ரிக் என்னும் விரல்ரேகை மூலம் வருகையை பதிவு செய்வது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணா என்பவர், முழு நேர மாணவராக முனைவர் பட்டத்துக்கும் (Ph.D.,) படித்து வருகிறார். இவர் இணையதளத்தை பயன்படுத்தி, விரல்ரேகையை படியெடுத்து (cloning) பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளார்.

பொறியியல் கல்லூரி ஒன்றில் நிர்வாக அலுவலராக முன்பு பணிபுரிந்த ஸ்ரீராம் பிரசாத் என்பவர், போலி விரல்ரேகைகளை உருவாக்கித் தருமாறு ராமகிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார். இவர்களுடன் இன்னொரு கல்வி நிறுவனத்தின் துணை முதல்வரும் இணைந்து பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து போலி ரேகையை உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்டதற்காக ஹைதராபாத் காவல்துறையினர் மூவரையிம் கைது செய்துள்ளனர். விசாரணையில் தாங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக ஹைதராபாத் நகர காவல்ஆணையர் அஞ்சனி குமார் தெரிவித்துள்ளார்.

More News >>