புயலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு சொந்த செலவில் வீடு: ராகவா லாரன்ஸ்
கஜா புயலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டித்தரப்படும் என நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
கஜா புயலின் கோர தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. பல மாவட்டங்களில் இன்னும் மின்சாரம் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும், கால்நடைகள் அழிந்தும் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்கள், விவசாயிகளுக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார்.கஜா புயலுக்கு பிறகு சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், விஜய், ரஜினி உள்பட நடிகர்கள் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், புயலில் பாதிக்கப்பட்ட மக்களில் 50 பேருக்கு வீடு கட்டித்தருவதாக நடிகர் ராகவா ராலன்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கஜா புயல் பாதித்த மக்கள் படும் வேதனையும், துயரத்தையும் பார்க்கும்போது வேதனை அடைந்தேன். புயலில் இடிந்து கிடக்கும் சில வீடுகளைப் பார்க்கும்போது நெஞ்சு வெடிக்கிறது. புயலால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக சென்று வீடு கட்டித்தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.ஏழையின் சிரிப்பின் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.