மாணவர்கள் பள்ளிகளுக்கு பைக், காரில் வர தடை: கர்நாடக அரசு அதிரடி
மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பைக் அல்லது காரில் வருவதற்கு தடை விதித்து கர்நாடக மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனம் மற்றும் காரில் வருகின்றனர். இவர்களின் வாகனங்களுக்கு கல்லூரிகளில் தனியாக இடம் ஒதுக்கி இருந்தாலும், வாகனங்களை அரைகுறையாக ஓட்டத் தெரிந்த மாணவர்களால் விபத்து ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு அம்மாநில கல்வித்துறை அமைச்சகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளன. அதாவது, மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு இனி இருசக்கர வாகனம் மற்றும் காரில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் ஜி.டி.தேவகவுடா கூறுகையில், "கல்லூரி, பள்ளிகளுக்கு கார், பைக் போன்ற வாகனங்களை கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவை மாணவர்களிடம் உடனடியாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.
இந்த உத்தரவு மூலம், பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்" என்றார்.