கஜா தாக்கிய பகுதிகளை இன்று பார்வையிடுகிறது மத்திய குழு
கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய குழு இன்று பார்வையிடுகிறது. இக்குழுவினர் 3 நாட்கள் இந்த ஆய்வை மேற்கொள்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்துவிட்டு போய்விட்டது கஜா புயல். ஒட்டுமொத்தமாக தங்களது வாழ்வாதாரங்களையே பறிகொடுத்துவிட்டனர் டெல்டா மக்கள்.
அப்பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப பல மாதங்களாகும். லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் முகாம்களில்தான் தங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது. மேலும் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக ரூ15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளை 3 நாட்கள் அக்குழு ஆய்வு செய்யும்.
உள்துறை அமைச்சகத்தின் நீதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.