மகளிர் டி20 உலக கோப்பை: இந்தியாவை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும் – மேற்கிந்திய அணியும் மோதின. இதில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 71 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியுள்ளது.
தற்போது நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில், இந்தியா – இங்கிலாந்து பலப்பரிட்சை நடத்தின.
முதலில் ஆடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் விளாசி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.
113 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்ய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியில் ஜோன்ஸ் மற்றும் ஸ்கைவர் அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்து இந்திய அணியின் உலக கோப்பை கனவை தகர்த்தனர். இன்று இரவு நடைபெறவுள்ள பைனலில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.