திருக்கார்த்திகை ஸ்பெஷல்: பனையோலை கொழுக்கட்டை
கார்த்திகை தீபத்திருநாளின் சிறப்பு உணவுப்பண்டம் பனையோலை கொழுக்கட்டை. பனை மரங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அதிலிருந்து கிடைக்கும் பனை வெல்லம் மற்றும் ஓலையைக் கொண்டு செய்யப்படும் இது பாரம்பரிய பண்டிகை பண்டமாகும்.
தேவையானவை:
அரிசி மாவு - 2 கிண்ணம்
கருப்பட்டி என்னும் பனை வெல்லம்(பொத்தது) - 1 கிண்ணம்
தேங்காய் துருவியது - 1/2 கிண்ணம்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி
பனை குருத்தோலை - 10 கீற்றுகள்
செய்முறை:
அரை கிண்ணம் அளவு நீரில் பொடித்த கருப்பட்டியை சேர்த்து கரையும் வரை கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவினை எடுத்து அதனுடன், துருவிய தேங்காய், சுக்கு தூள் மற்றும் ஏலக்காய் பொடியினை சேர்க்கவும். சிறிது வெந்நீர் சேர்த்து மாவினை குழைவாக பிசையவும்.
பனை ஓலைகளை அரையடி நீளத்திற்கு நறுக்கி, பிசைந்த மாவை உள்பகுதியில் வைத்து மூடவும்.. பிரிந்து விடாமல் இருக்க, ஓலையை நார்போல கிழித்து மேலும் கீழும் கட்டவும். இட்லி கொப்பரையில் வைத்து நீராவியில் சமைக்கவும். போதுமான நேரம் கழிந்ததும் இறக்கி பரிமாறலாம்..
பனை வெல்லம் உடலுக்கு நல்லது. ஆவியில் அவித்த உணவுப் பொருள் தீங்கு விளைவிக்காது.
இனி திருக்கார்த்திகை வாழ்த்துகள்!