வெப் சீரியலில் களமிறங்கும் அமலா!
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அமலா, சுனைனா நடிக்கவுள்ள புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழில் டி.ராஜேந்திர் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமான அமலா, பின்னர், ரஜினி, கமல், மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் எனவும் தென்னிந்திய நாயகியாக ஒரு ரவுண்டு வந்தார்.
பின்னர், நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அமலா நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2012ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல், 2014ஆம் ஆண்டு மனம் ஆகிய தெலுங்கு படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
அதன் பின்னர், தற்போது 4 ஆண்டுகள் கழித்து சுனைனா நடிக்கவுள்ள புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமீட் ஆகியுள்ளார். நிலா நிலா ஓடி வா என்ற காட்டேரி வெப் தொடர் சுனைனாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்நிலையில், பெண் இயக்குநர் புஷ்பா இயக்கும் ஹை பிரிஸ்டஸ் எனும் புதிய வெப் தொடரில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.