இந்தியாவுக்காக சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைக்கிறது பிரான்ஸ் நிறுவனம்.

தேசிய மீத்திறன் கணினி செயல்முறைத் திட்டத்திற்காக (National Supercomputing Mission -NSM) சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் மீத்திறன் கணினிகளை கட்டமைக்கும் ஒப்பந்தத்தை ஆட்டோஸ் (Atos) என்னும் பிரான்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.                               வானிலை முன்னறிவிப்பு, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் தரவுகளை பெறும் பணிக்காக உயர்திறன் கொண்ட கணினிகளை கட்டமைப்பதற்கான ஒப்பந்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing - C-DAC) அறிவித்திருந்தது. மூன்று கட்டங்கள் கொண்ட இந்தப் பணியின் முதற்கட்டப் பணிக்கான ஒப்பந்தம் ஆட்டோஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி 4,500 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும்.

தேசிய மீத்திறன் கணினி செயல்முறைத் திட்டம், கட்டமைத்தல் மற்றும் வாங்குதல் ஆகிய இரண்டு முக்கிய தடங்களில் நிறைவேற்றப்படும். மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையமும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகமும் இந்தப் பணிகளை முன்னெடுக்கும். மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட இருக்கும் மீத்திறன் கணினி வடிவமைக்கும் பணியில் மூன்று கட்டங்களிலும் பிரெஞ்சு நிறுவனமான ஆட்டோஸ், மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையத்துடன் இணைந்து பங்காற்றும்.

முதல் கட்டத்தில் மீத்திறன் கணினிகள் வடிவமைத்தலும், இரண்டாம் கட்டத்தில் சில பாகங்கள் மற்றும் மதர்போர்டு ஆகியவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். மூன்றாவது கட்டமாக மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் மூலம் இந்தியாவிலேயே மீத்திறன் கணினி வடிவமைக்கப்படும். மூன்றாண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணிக்கு ஏழாண்டு கால அளவு நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் BullSequana வகை கணினி இந்தியாவில் வடிவமைக்கப்படும் என்று மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் ஹேமந்த் தர்பாரி தெரிவித்துள்ளார்.

More News >>