சிந்து சமவெளி நகரத் தலைவனின் சிற்பம்! - ஆச்சரியப்படுத்திய மதுரை குயவர்
தொன்மை நாகரிகங்களை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார் ஒடிஷாவில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் பாலகிருஷ்ணன். அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான பரிசு ஒன்று தொல்பொருள் ஆய்வாளர்களை நெகிழ வைத்திருக்கிறது.
சென்னையில் `பானைத் தடம்' என்ற பெயரில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் பாலகிருஷ்ணன். சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டள்ள பதிவில், ` முன்பின் அறியாத, முகம் தெரியாத மனிதர்கள் சிலநேரம் மனசின் அடி ஆழத்திலிருந்து வார்த்தைகளாய் மட்டுமல்லாமல் ஏதோ ஒரு குறியீடாக தெரிவிக்கும் வாழ்த்தும் பாராட்டும் அளிக்கும் நெகிழ்ச்சி மிக அழகானது.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் காரணங்கள் பிரமாண்டமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நேற்று சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அந்நூலகத்தின் இயக்குனர் சுந்தர், மதுரையில் இருந்து எனக்கொரு பரிசு வந்திருப்பதாகச் சொல்லி ஒரு சிறிய சுடுமண்உருவ பொம்மையை ( Terracotta figurine) என்னிடம் கொடுத்தார். வாங்கிப் பார்த்தால் அது சிந்துவெளி நகரத் தலைவன் ( Priest King) என்று அகழ்வாராய்ச்சியாளர்களால் பெயர் சூட்டப்பட்ட உருவம்.
அதைப்போலவே செய்து அனுப்பி இருக்கிறார் மதுரையைச் சேர்ந்த முதுவாய்க் குயவர் ( as Sangam literature calls a potter of ancient wisdom) ஒருவர்.
அந்த உருவ பொம்மையை ஆசையோடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது சுந்தர் சொன்னார். "உருவ பொம்மையின் அடிப்பகுதியைப் பாருங்கள்". பார்த்தேன். எனக்குப் புரியாத வரிவடிவத்தில் ஏதோ கீறி இருந்தது. "என்ன" என்று கேட்டேன். தமிழ் பிராமி வரி வடிவத்தில் " பாலகிருஷ்ணன்" என்று உங்கள் பெயரை எழுதியிருக்கிறார்கள் என்றார் சுந்தர். மிகவும் வியப்பாக இருந்தது. கடந்த செப்டம்பர் 20 தேதி சிந்துவெளி கண்டுபிடிப்பு குறித்த அறிவிப்பின் 94 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு " பானைத் தடம்" என்ற தலைப்பில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நான் உரையாற்றினேன்.
அது ஊடகங்களிலும் வெளியானது. அந்த உரையைத் தொடங்கும் முன்பு நான் எழுதிய " ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எங்கள் வரலாற்றின் பாதைக்கு ஒரு பானைபதம்" என்று தொடங்கும் இசைப்பாடலை குயவர் அஞ்சலியாக சமர்ப்பித்தோம். ( இசை : தாஜ் நூர், பாடியவர் வேல்முருகன்). அந்தப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த ஒரு மதுரைக் குயவரின் அன்புப் பரிசு தான் இந்த சுடுமண் பொம்மை. சிந்துவெளி உருவம். தமிழ் பிராமியில் எனது பெயர். வேறென்ன வேண்டும்' என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
-அருள் திலீபன்