அந்தமானில் சென்டினல்களிடம் சிக்கி உயிரிழந்த மத போதகர் பின்னணி என்ன?

அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் சென்டினல் இன பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்த மக்கள் வெளியுலகத் தொடர்பை வெறுப்பவர்கள். மிக சொற்பமாகவே இவர்கள் இந்த தீவில் வாழ்கின்றனர். இந்த நிலையில் , அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் என்ற கிறிஸ்தவ மத போதகர் அவர்களிடத்தில் சென்று கிறிஸ்தவ மதத்தை பரப்பும் முயற்சியில் இறங்கினார். இதற்காக அந்தமானைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் இவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அங்கே அழைத்து சென்றுள்ளனர்.

கடந்த நவ்ம்பர் 17- ந் தேதி சென்டினல் தீவுக்குக் சென்ற ஜான் ஆலன் அங்கே வசித்த சென்டினல்களுடன் பழக முயன்றுள்ளார். வெளி மக்களிடம் பழக விரும்பாத அந்த மக்கள் அவரை கூர்மையான அம்புகளை ஏவி கொன்றுள்ளனர். அவரின் உடலை கடற்கரையோரத்தில் புதைத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஆலனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசு அவரின் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், இதுவரை அவரின் சடலத்தை மீட்க முடியவில்லை. அந்தமான் நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் சட்டத்துக்குப் புறம்பாக ஆலன் அங்கே சென்றுள்ளார். இது தொடர்பாக ஆலனின் அந்தமான் நண்பர் அலெக்ஸ் மற்றும் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவரின் சடலத்தை மீட்க முயன்று வருகின்றனர். கொல்லப்பட்ட ஆலனின் வயது 26.

More News >>