கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிக தார்ப்பாய் கூரை
கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிக தார்ப்பாய் கூரை அமைத்துதரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கஜா புயல் கரையை கடந்து நீண்ட நாட்கள் ஆகியும், பல மாவட்டங்கள் இன்னும் பாதிப்பில் இருந்து மீளா துயரத்தில் தான் உள்ளன. குறிப்பாக, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், 40 சதவீதம் சீரமைப்பு பணி தான் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
தென்னை மரம் முதல் வீட்டின் கூரைகள் என அனைத்தும் கஜா புயலின் சூரைக்காற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால், வீடுகள் இழந்து பலர் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிக தார்ப்பாய் கூரை அமைத்துதரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தார்ப்பாய் அளித்தால் உதவிகரமாக இருக்கும் என்ற மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தார்ப்பாய் வாங்கி உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.