தமிழகத்துக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி கேரளா காட்டிய நன்றி !
கஜா புயலால் தமிழகத்தின் தஞ்சை, நாகை , புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
மின் இணைப்பு இல்லாமல் மக்கள் துயரத்தில் உள்ளனர். மின்சார கம்பங்களை மீண்டும் நடுவதற்காக பணிகள் மின்னல்வேகத்தில் நடந்து வருகின்றன. கேரளாவில் அண்மையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. பக்கத்து மாநிலம் பாதிக்கப்பட்டதால் துயரத்துக்குள்ளான தமிழக மக்கள் நிதியை அள்ளி வழங்கினர். முல்லை பெரியாறு விஷயத்தில் தமிழகத்துடன் மோதல் போக்கை கேரளா கடைப்பிடித்தாலும் அண்டை மாநில சகோதரர்கள் மழையால் பாதிக்கப்பட்ட போது தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள் வண்டி வண்டியாக சென்றன. தமிழக மக்கள் செய்த உதவியை கண்டு கேரள மக்கள் நெகிழ்ந்தனர். அதோடு, தமிழக மின்வாரியமும் தன் ஊழியர்களை கேரளாவுக்கு அனுப்பி மின்கம்பங்களை நடுவதற்கு உதவியது.
அடுத்த மூன்றே மாதங்களில் கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டது. உடனடியாக கேரள முதல்வர் பினராயி விஜயன், மின் ஊழியர்களை அனுப்பி தமிழகத்துக்கு உதவ கேரள மின்வாரியத்துக்கு உத்தரவிட்டார். பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் , திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து 400- க்கும் மேற்பட்ட கேரள மின்வாரிய ஊழியர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு உதவி வருகின்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அவர்கள் பணி புரிந்து வருகின்றனர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய தமிழகத்துக்கு நன்றியாக கேரள அரசு திருப்பி இதை செய்துள்ளது.
கர்நாடக, ஆந்திர அரசுகள் கஜா புயல் பாதிப்பு பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.