சிறைப்பறவைகளின் உதவிக்கரம்: ராஜீவ் கொலை குற்றவாளிகளின் நெகிழ்ச்சி செயல்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் சம்பளத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியாக வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 15- ம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன. கனமழையில் சிக்கி 60- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், தென்னை மரங்கள் நாசமாகின. கால்நடைகள் உயிரிழந்தன. படகுகள் சேதமடைந்தன. விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிந்தன. இதனால், விவசாயிகளும், மீனவர்களும் மீளா துயரத்தில் உள்ளனர்.
தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வர்களும், சினிமா பிரபலங்களும் நிவாரண பொருட்கள், நிவாரண நிதிகள் என உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது சிறையில் வேலை பார்த்த சம்பளத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உள்ளனர்.
மதுரை மத்திய சிறையிலுள்ள அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன், தான் சிறையில் உழைத்து சம்பாதித்த ரூ.5,000 தொகையை தனது வழக்கறிஞர் திருமுருகன் மூலம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பினார்.
இதேபோல், வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி தனது சிறை சம்பளத்தில் இருந்து ஆயிரத்தை தனது வழக்கறிஞர் மூலம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.