மின்சாரம் பாய்ந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த மின் ஊழியர் பலி
புதுக்கோட்டையில் மின்கம்பம் பழுது பார்த்த பணியின்போது, மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த மின் ஊழியர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதுக்கோட்டையும் ஒன்று. இங்கு, புயல், கனமழை எதிரொலியால் மின் கம்பங்கள் பல சாய்ந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, சேதமடைந்து புதுக்கோட்டை மாவட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட வந்திருந்தார். அப்போது, மின்சார ஊழியர்கள் சிலர் சீரனூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நின்று பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில், எதிர்பாராதவிதத்தில் மின் ஊழியர்களான முருகேசன் மற்றும் மோகன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் அவர்களை மீட்டு அவரது காரிலேயே அழைத்து சென்று திருச்சி மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மின் ஊழியர் முருகேசனின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.