முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13.32 கோடி நன்கொடை வசூல்
கஜா புயல் பாதிப்பு நிவாரணமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சம் நன்கொடையாக கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன. கஜா புயலால் ஏற்பட்ட சூறைக்காற்று, கனமழையில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகள், படகுகள் என விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் வேரோடு அழிந்தன. இதனால், விவசாயிகளும், மீனவர்களும் மீளா துயரத்தில் உள்ளனர்.
தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலர் நிவாரண பொருட்கள், நிவாரண நிதிகள் என உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்த வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 688 ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.