அயோத்தியில் 221 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை!- ஆதித்யநாத் உறுதி
அயோத்தியில் 221 மீட்டர் உயரம் கொண்ட ராமர் சிலை அமைக்கப்படுமென்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.சரயு நதிக்கரையில் அமையவுள்ள சிலையின் பீடத்தின் உயரம் 50 மீட்டரில் உருவாக்கப்படும். சிலையின் உயரம் 151 மீட்டராகவும், சிலைக்கு மேல் உள்ள குடையின் உயரம் 20 மீட்டராகவும் அமைகிறது.இந்த சிலை வெண்கலத்தால் அமைக்கப்பட உள்ளது . அயோத்தியின் சிறப்புமிக்க வரலாற்றை விளக்கும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. தற்போது, சிலை அமைய உள்ள இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அதிகளவில் பிரமாண்டமான சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 31- ம் தேதி 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மும்பையில் வீரசிவாஜி சிலை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் மாண்டாயா மாவட்டத்தில் கே.எஸ்.ஆர் அணைக்கட்டு பகுதியில் காவிரி அன்னைக்கு ரூ.360 கோடி செலவில் பிரமாண்ட சிலை அமைக்கப் போவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது சர்தார் வல்லபாய் சிலைதான் உலகிலேயே உயரமானது. ராமர் சிலை அமைக்கப்பட்டு விட்டால், இதுதான் உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையை பெறும்.