ஆட்சியில் பங்கு தந்தால்தான் திமுகவுடன் கூட்டணி...ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் குடைச்சல் - Exclusive
உடையும் திமுக கூட்டணி- வைகோவுக்கு நோஸ்கட் கொடுத்த ஸ்டாலின்! எடப்பாடி பக்கம் தாவும் திருமாவளவன்! EXCLUSIVE
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம் என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது. அப்படி தேர்தல் வரும் பட்சத்தில் ஆட்சியை பிடிக்க நிறைய வியூகங்களை உருவாக்கி வருகிறது திமுக.
தனித்தே ஆட்சியை பிடிக்க முடியும் என திமுகவின் இளவட்டங்கள் தம்மிடம் வலியுறுத்துவதை கண் இமைக்காமல் நம்புகிறார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களோ, "வலிமையான கூட்டணி அவசியம். குறிப்பாக, தொகுதிக்கு குறைந்தது 3000 வாக்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேசிய கட்சி இருப்பது அவசியம் " என்கிற ரீதியில் கருத்துக்களை பதிய வைத்ததால், காங்கிரசை கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள சம்மதித்த ஸ்டாலின், ' திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், தொகுதி பகிர்வு விசயத்தில் முன்பு மாதிரி அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ளக்கூடாது. காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதற்கு வசதியாக 6 அல்லது 7 தொகுதிகளை மட்டும்தான் ஒதுக்க முடியும். அதேபோல, சட்டமன்றத்தில் அதிகபட்சம் 25 தொகுதிகள் ஒதுக்கலாம். இதைத்தவிர்த்து அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ளக் கூடாது ' என ராகுல்காந்திக்கு தகவல் தந்துவிட்டார்.
தேர்தல் நெருக்கத்தில் பேச்சுவார்த்தைத் துவங்கும் போது, அப்போது வேண்டுமானால் ஓரிரு தொகுதிகளை அதிகப்படுத்துலாம் என்கிற ரகசிய முடிவிலும் இருக்கிறார் ஸ்டாலின்.
திமுக தலைமையின் இந்த முடிவை தற்போது ஏற்றுக்கொள்ளும் ராகுல், தேர்தல் உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்துக்கும் போது இடங்களை அதிகப்படுத்துவதை வைத்துக்கொள்வோம். இப்போதே முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், ராகுலை சந்திக்கும் போதெல்லாம் ஒரு கருத்தை அழுத்தமாக பதிவு செய்து விட்டு வருகிறார் மாநில தலைவர் திருநாவுக்கரசர். இது குறித்து நம்மிடம் பேசும் அவரது ஆதரவு மாவட்ட தலைவர்கள், "திமுகவுடன் 2004 -ல் காங்கிரசுக்கு ஏற்பட்ட உறவு இப்போது வரை நீடிக்கிறது. 2006-ல் திமுக ஆட்சி அமைத்த போது நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் வழங்கியது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது ஆதரவைத் தந்து ஒதுங்கி நிற்காமல் அமைச்சரவையிலும் பங்கேற்றது.
கருணாநிதிக்கான இதனை காங்கிரஸ் ஏற்றது. ஆனால், இப்போது, கருணாநிதி இல்லாத நிலையில் ஸ்டாலினுக்கு பெரிய ஆளுமை கிடையாது. தனிப் பெரும்பான்மை கிடைப்பது அரிது. காங்கிரஸ் ஆதரவு வாக்குகளில்தான் திமுக பல இடங்களில் ஜெயிக்க முடியும். அதனால், அறுதிப் பெரும்பான்மை கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெரும் வகையில் கூட்டணி ஆட்சி குறித்து வலியுறுத்த வேண்டும். அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்றால்தான் மாநிலத்தில் கட்சியை வளர்க்க முடியும் என ராகுலிடம் திருநாவுக்கரசு பதிவு செய்து வருகிறார்.
இதில் ராகுலுக்கும் உடன்பாடுதான். அதனால், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடக்கும் போது, தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம் வேண்டும் அல்லது கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இதைத்தான் கட்சி நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொள்கிறார் திருநாவுக்கரசர். அதனால் இனி காங்கிரஸ் தலைமை நிபந்தனைகளை முன்வைத்தே கூட்டணி அமைக்கும் என்கின்றனர் கதர்சட்டை வட்டாரங்கள்.
கடந்த வாரம் சத்திய மூர்த்திபவனில் நடந்த சென்னை கிழக்கு- மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய திருநாவுக்கரசர், தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாடம் நடத்தினர். அது குறித்து பல செயல் திட்டங்களை பகிர்ந்துகொண்டு விட்டு, காங்கிரஸ் ஆதரவில்தான் 2006-ல் ஆட்சி அமைத்தார் கருணாநிதி. அந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் திமுகவுக்கு கிடைக்கவில்லை. தேர்தல் கூட்டணி உருவாகும் போது, நிபந்தனையற்ற ஆதரவை திமுகவுக்கு நம்முடைய டெல்லி தலைமை கொடுத்திருந்ததால் அமைச்சரவையில் நாம் இடம் கேட்காமல் ஆதரவை தந்தோம்.
நம்முடைய ஆதரவில்தான் 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார் கருணாநிதி. இனி அப்படி ஒரு நிலை கூடாது. வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை ஜெயித்தால் அமைச்சரவையில் இடம்கேட்போம். அதற்கு, திமுக கூட்டணியில் நமக்கு ஒதுக்கப்படும் அத்தனை தொகுதிகளிலும் நாம் ஜெயிக்க வேண்டும். அதற்கேற்ப கடுமையாக உழைக்க வேண்டும் " என பேசியிருக்கிறார்.
டெல்லியில் ராகுலிடம் தான் வலியுறுத்தி வருவதைத்தான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஒப்புவித்தார் என்கிறார்கள் திருநாவுக்கரசு ஆதரவாளர்கள்.
கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு. காங்கிரஸும் காணுகிறது. ஆனால், காங்கிரசின் கனவுக்கு திமுக ஒப்புக்கொள்ளுமா ? அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா? என்பது கூட்டணி பேச்சுவார்த்தையின் போதுதான் தெரியும்.
-எழில் பிரதீபன்