புவி வெப்பமாதல்: ஐ.நா. டுவிட்டரில் பொது மக்களின் கருத்து பதிவுகள் வரவேற்பு
பருவ நிலை மாற்றம் குறித்த COP 24 என்ற கருத்தரங்கு போலந்து நாட்டில் டிசம்பர் 2 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புவி வெப்பமயமாதலை தடுப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை வலியுறுத்துவதற்காக, பருவ நிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு (UNFCCC) இதை ஒருங்கிணைக்கிறது.2015ம் ஆண்டு பாரீஸ் நகரத்தில் நடந்த கூட்டத்தில் உலக வெப்பமயமாதல் குறியீடு 2 பாகை (டிகிரி) செல்சியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு முந்தைய கால அளவுகோல்படி 1.5 செல்சியஸே அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால், இக்குறியீடு விரைவில் 3 டிகிரியை விட அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலை தடுக்கும் அவசியம் குறித்ததான இக்கருத்தரங்கில் பிரிட்டனை சேர்ந்த உலக புகழ் பெற்ற இயற்கை வல்லுநர் சர் டேவிட் அட்டன்பர்க்கை டிசம்பர் 3ம் தேதி உரையாற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைத்துள்ளது. புவி வெப்பமயமாதலை தடுப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்க வேண்டுமென்பதற்காகவும், பொது மக்களின் கருத்துகள், ஆலோசனைகளை அறிந்து கொள்வதற்காகவும் டேவிட் அட்டன்பர்க், டுவிட்டரில் ஹேஸ்டேக் ஒன்றை உருவாக்குமாறு பரிந்துரைத்தார்.
அதன்படி, UN Climate Change @UNFCCCஎன்ற டுவிட்டர் கணக்கில் 'மக்களுக்கான இருக்கை' (People's Seat) என்ற பெயரில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிவில் #TakeYourSeat என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி அனைத்து நாடுகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.