நான் குடிபோதையில் கார் ஓட்டினேனா? ட்விட்டரில் கொந்தளித்த பிக்பாஸ் காயத்ரி ரகுராம்

தாம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கியதாக வெளியான செய்திகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் மறுத்துள்ளார்.

சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே அதிகாலையில் குடிபோதையில் காரை ஓட்டி சென்ற போது காய்த்ரி ரகுராம் போலீசிடம் சிக்கினார். போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதை மறுத்து ட்விட்டரில் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளதாவது:

எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும் பத்திரிகையும் பலமானதாக இருக்கலாம். ஆனால், எனது ஆன்மாவைவிட வாழ்க்கையைவிட எதுவும் வலுவானது இல்லை.

என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். நான் துணிச்சலுடன் வாழ்வேன். இந்த பொய் செய்தியை உருவாக்கிய செய்தியாளர்தான் போதையில் இருந்தார். 

நான் எனது படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் எனது சக நடிகரை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமான வாகன சோதனைக்காக என்னை நிறுத்தினார்கள்.

அங்கே வாக்குவாதமோ தர்க்கமோ எதுவும் நடக்கவில்லை. அந்த செய்தியாளர் அவர் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதியிருக்கிறார்.

எனது லைசன்ஸ் மற்ற ஆவணங்கள் வேறொரு கேண்ட் பேக்கில் இருந்ததால் அவற்றை அப்போது போலீஸாரிடம் காண்பிக்க முடியவில்லை.

அவர்கள் பணியை நான் பாராட்டினேன். அங்கே எனது ரசிகர் ஒருவர் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். நானேதான் எனது காரை ஓட்டிச் சென்றேன். ஒருவேளை நான் போதையில் இருந்திருந்தால் என்னை எப்படி காரை ஓட்டிச் செல்ல அனுமதித்திருப்பார்கள்.

10 நிமிடங்கள்தான் நான் அங்கிருந்திருப்பேன். என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் எனக்கு கவலை இல்லை. போதையில் இருந்த அந்த செய்தியாளரை விட்டுவிட்டு எல்லோரும் என்னை குறிவைக்கின்றனர். தனிப்பட்ட சுதந்திரம் என்பதே இங்கில்லை. இருந்தாலும் வேறு முக்கியமான விஷயங்கள் இருப்பதால் அதை கவனிக்கிறேன். கடவுள் அருளட்டும் என பதிவிட்டுள்ளார்.

காயத்ரியின் இந்த பதிவுக்கு மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான காஜலும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். தாமும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் இது எப்போது நடந்தது? என கிண்டலாக கேட்டிருக்கிறார் காஜல்.

 

More News >>