பாக். எல்லையில் சாலை அமைக்க சு.சுவாமி கடும் எதிர்ப்பு
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி புதிய சாலை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களின் குருவான குருநானக் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகாலம் வாழ்ந்தார். அங்குள்ள குருத்துவாராவுக்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.
ராவி நதிக்கரையில் உள்ள இந்த கர்தார்பூரையும் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் அருகே உள்ள தேராபாபா நானக் என்கிற இடத்தையும் இணைக்கும் வகையில் சாலை அமைக்க இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.
குருதாஸ்பூரில் சர்வதேச எல்லை வரை இந்தியாவும் கர்தார்பூர் வரை பாகிஸ்தானும் சாலை அமைக்கின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய பாஜக அரசின் இத்திட்டத்துக்கு பாஜகவின் ராஜ்யசபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், இத்திட்டம் மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தானியர்கள் பாஸ்போர்ட்டை மட்டும் காட்டிவிட்டு இந்தியாவுக்குள் வருவதை அனுமதிக்க முடியாது. இந்தியாவுக்குள் வருவதற்கு 6 மாதத்துக்கு முன்னரே பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.