முழு அரசு மரியாதையுடன் மறைந்த நடிகர் அம்பரீஷ் உடல் தகனம்
மறைந்த முன்னாள் அமைச்சரும், பிரபல கன்னட நடிகருமான அம்பரீஷின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கன்னட திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் பிரபல நடிகர் அம்பரீஷ் (66). நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான இவர் கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்தவர்.
சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ள அம்பரீஷ், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார்.
அம்பரீஷ் மறைந்த செய்திக் கேட்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடனடியாக பெங்களூருக்கு சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.இதேபோல், முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா, சித்தராமையா உள்பட ஏராளமான அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கன்ட்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அம்பரீஷின் உடல் இன்று மாலை 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.