மரபணு திருத்தப்பட்ட குழந்தைகள்: சீன விஞ்ஞானி உலக சாதனை

ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய மரபணு திருத்தத்தை தாம் செய்துள்ளதாக ஹே ஜியான்குய் என்ற சீன ஆராய்ச்சியாளர் அறிவித்துள்ளார். இது உண்மையாகும் பட்சத்தில் அறிவியலில் மிகப்பெரும் சாதனையாகவும், வாழ்க்கை நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாகவும் விளங்கும்.

சீனாவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்த ஏழு தம்பதியருள் ஒரு தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் நவம்பர் மாதத்தில் பிறந்துள்ளன. சீனாவின் ஷென்சென் என்ற பகுதியிலுள்ள தமது ஆய்வகத்தில் ஹே ஜியான்குய் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளார். ஏழுபேரின் கருத்தரிப்பிலும் மரபணு (DNA) திருத்தம் செய்ய தாம் முயற்சித்ததாகவும் ஒருவருக்கு மட்டுமே கருத்தரித்தல் வெற்றியானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த நோயையும் குணப்படுத்துவதற்காக அல்லது பரம்பரை வியாதியை தடுப்பதற்காக தாம் இந்த முயற்சியை செய்யவில்லையென்றும், எய்ட்ஸ் (AIDS) நோயை உருவாக்கும் ஹெச்ஐவி (HIV) கிருமியை எதிர்கொள்ளக்கூடிய மரபணுவை உருவாக்கவே முயற்சித்ததாகவும் ஜியான்குய் கூறியுள்ளார்.

விந்தணு, கருமுட்டை, கரு ஆகியவற்றில் மாற்றம் செய்து கொடும் நோய்களை தடுப்பதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. அமெரிக்காவில் இது ஆய்வுக்காக என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், மக்களுக்கு பெரும் சவாலாக விளங்கும் எய்ட்ஸை பொறுத்தமட்டில் ஆய்வுநோக்கில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்று அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணு வல்லுநர் ஜார்ஜ் சர்ச் கூறியுள்ளார்.

ஹே ஜியான்குய்யின் இந்த ஆய்வு முடிவு இன்னும் அதற்கான அறிவியல் இதழ்களில் வெளியிடப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் இன்னும் இதை பரிசோதிக்க இருக்கிறார்கள். "இது முதல் வெற்றியாக அல்ல;மாதிரியாக விளங்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சமுதாயம்தான் முடிவு செய்யவேண்டும்," என்று செய்தியாளர்களிடம் கூறிய ஜியான்குய், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட தம்பதியரை அடையாளம் காட்டவோ, அவர்களிடம் பேட்டி எடுக்கவோ அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

More News >>