தந்தையின் புகைப்பழக்கத்தால் மலடாகும் மகன்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மனித உடலுக்கு கேடு உண்டாக்கி உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கி கடைசியில் உயிரை பறிக்கும் தீய பழக்கங்களில் மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் மதுவுக்கு அடிமையானவர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் நாளடைவில் மிக மோசமாகி உயிரை கரைத்து விடுகிறது.
புகைப்பிடிக்கும் பழக்கமோ, நுரையீரலை சிறிது சிறிதாக அழித்து அதன் விளைவாக பல சிக்கல்களை உண்டாக்கி கடைசியில் உயிரை பறித்து விடுகிறது.சிகரெட், பீடி புகைப்பவர்களின் உடல்நிலை மட்டும் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது அவர்களை சுற்றியிருப்பவர்களும் புகையால் பாதிக்கப்படுகின்றனர் என்பது நாம் அறிந்து ஒன்றுதான்.
ஆனால் தற்போது புதிய ஆராய்ச்சி ஆய்வின் முடிவு ஒன்று, புகைப்பிடிப்பதால் ஒருவரின் வம்சாவளியே இனப்பெருக்க திறனை கணிசமாக இழப்பதாக கூறுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் தந்தை புகைப்பிடிப்பவராக இருந்தால் அவரது மகளுக்கு இனப்பெருக்க காலம் கணிசமாக குறைந்து விடுகிறது,
அதே போல் மகனுக்கு விந்துவில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறது என்பது தான் இந்த ஆய்வின் சாராம்சம்.கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடிக்கும் பெண்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புகைப்பிடிக்கும் தந்தைகளை கொண்ட மகன்களின் விந்தணு எண்ணிக்கை, புகைப்பிடிக்காத அப்பாக்களை கொண்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் பாதிக்கு பாதிக்கு குறைவாக இருப்பதாக இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
இது பற்றி ஸ்வீடனில் உள்ள லுண்ட் பல்கலையின் சிறப்பு மருத்துவர் ஜோனதன் அக்ஸல்சன் கூறுவதாது: சிகரெட்டில் உள்ள நிகோட்டின் பொருளின் தாக்கம் தாய்க்கு எந்த அளவில் ஏற்பட்டிருந்தாலும் சரி, புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்ட தந்தைகளுக்கு பிறக்கும் மகன்களின் விந்தணு எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதை கண்டுபிடித்து நான் வியப்படைந்தேன்.
விந்தணு எண்ணிக்கை மற்றும் பெண்ணை கர்ப்பம் தரிக்க வைப்பதற்கும் இடையே தொடர்பு இருப்பது என்பது எல்லோரும் அறிந்தது தான், இதனால் இந்த ஆண்களுக்கு எதிர்காலத்தில் குழந்தை பிறக்கும் சாத்தியக்கூறு கணிசமாக பாதிக்கப்படுகிறது.
இது தாய் புகைப்பிடித்தல், சமூக பொருளாதார காரணிகள், சுயமாக புகைப்பிடித்தல் போன்ற காரணங்கள் தவிர்த்து, புகைப்பிடிக்காத தந்தைகளுக்கு பிறக்கும் மகன்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிக்கும் தந்தைக்கு பிறந்து வளரும் ஆண்களுக்கு விந்தணு செறிவு 41 சதவீதம் குறைவாகவும், விந்தணுக்களின் எண்ணிக்கை 51 சதவீதம் குறைவாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தந்தையின் புகைப்பழக்கத்தால் மகளின் இனப்பெருக்க காலமும் குறைவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் இருக்கும் இயக்கசெயல்முறைகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் புகைக்கும் பழக்கத்துக்கு அடிமையான தந்தைகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உருவபிறழ்சி போன்ற பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு இடையே தொடர்பு இருப்பதை இதே போன்ற ஆய்வு முடிவு வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆய்வு 17 மற்றும் 20 வயதுக்கு இடைப்பட்ட 104 ஸ்வீடன் ஆண்களிடத்தில் நடத்தப்பட்டது. புகைப்பிடித்தல் விந்தணுவில் டிஎன்ஏ சேதத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர புகைப்பவர்களின் டிஎன்ஏ ஸ்ட்ராண்ட் அதிகளவில் உடைகிறது. மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்திய கூடிய பொருள் புகையிலை இருக்கிறது. இதனால் பெண்களின் கருத்தரிக்கும் போது கேமட்கள் (பாலின உயிரணுக்கள்) மாற்றங்களுக்கு உட்படுகிறது. இது மரபணுவில் கலப்பதால் பிறக்கும் ஆண் குழந்தையின் விந்தணு தரத்தை கணிசமாக குறைத்து விடுகிறது என்றும் ஆய்வாளர் அக்ஸல்சன் குறிப்பிட்டார்.
-வரதன்