வெளியே கழட்டிவெச்ச செருப்பை காணோம்.. போலீசிடம் மன்றாடும் வாலிபர்

ரத்த பரிசோதனை மையத்தின் வெளியில் கழட்சி வெச்ச என் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை, கண்டுபிடித்து தரும்படி போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை, இளையமுதலி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜேஷ் குப்தா (40). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ராஜேஷ் குப்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.800 மதிப்புள்ள காலணி (செருப்பு) வாங்கியுள்ளார்.

இதனை அணிந்துக்கொண்டு நேற்று வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகேயுள்ள ரத்த பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார்.

செருப்பை வெளியே கழட்டிவிட்டு உள்ளே சென்று வேலை முடிந்ததும் வீடு திரும்ப வெளியில் வந்தார். அப்போது அவரது விலை உயர்ந்த செருப்பை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் செருப்பு இல்லை.

அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் உடனே தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தார். அதில், தனது ரூ.800 மதிப்புள்ள செருப்பை காணோம். வாங்கி இரண்டு நாட்களே ஆன நிலையில் யாரோ திருடி சென்றுவிட்டனர். என் செருப்பை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று போலீசிடம் மன்றாடி குறிப்பிட்டிருந்தார்.

கிறுகிறுத்துப்போன போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ரத்த பரிசோதனை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் மூலம், செருப்பை திருடியது யார் என்ற தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செய்தி அப்பகுதியில் பரவியதை அடுத்து, மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

More News >>