அழகிரி ஆதரவாளர்களின் உறுப்பினர் அட்டைகள் கேன்சல்... இன்னொரு துரைமுருகனாகும் ஐ. பெரியசாமி? Exclusive
திண்டுக்கல் மாவட்டத்தில் தமது ஆதரவாளர்களின் திமுக உறுப்பினர்கள் அட்டைகளை புதுப்பிக்காமல் கேன்சல் செய்து வருவது அழகிரியை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அமைதியாக இருந்ததது போதும்.. இனி ஆடுகளத்துக்கு வர வேண்டியதுதான் அண்ணே என கொந்தளிக்கின்றனராம் அவரது ஆதரவாளர்கள்.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் தம்மை சேர்க்க வேண்டும் என பகிரங்க போர்க்கொடி தூக்கினார் அழகிரி. ஒருகட்டத்தில் ஸ்டாலின் தலைமையை ஏற்கவும் தயார் எனவும் கூறிப் பார்த்தார்.
ஆனால் ஸ்டாலினின் கிச்சன் கேபினட் இம்மியளவும் இறங்கி வரவில்லை. இதனால் கடுப்பாகிப் போன அழகிரி, கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தினர்.
பின்னர் பல இடங்களில் கருணாநிதி மலரஞ்சலி கூட்டத்தையும் நடத்தி தமது பலத்தை வெளிப்படுத்தினார். கடைசியாக திண்டுக்கல் நகரில் அழகிரி பங்கேற்ற மலரஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் கூட்டத்துக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் ஆத்தூர் தொகுதியில் இருந்துதான் ஏராளமானோர் சென்றிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐபி தரப்பு பலவகையான பேரங்களைப் பேசி பார்த்தது.
அதிருப்தியாளர்களில் வீடு கட்டுவோருக்கு கட்டுமானப் பொருட்கள், பணம் என்றெல்லாம் கூட பேரம் பேசியது. ஆனால் ஐ.பெரியசாமியின் ஜாதிய ரீதியான செயல்பாடுகளால் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பேரத்துக்கு படியவில்லை.
இதனால் தமக்கே ஆதரவு அதிகம் என காட்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார் ஐ. பெரியசாமி. தற்போது திமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி திண்டுக்கல்லில் அழகிரி கூட்டத்துக்குப் போன ஆயிரக்கணக்கான அதிருப்தியாளர்களின் உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்காமல் கேன்சல் செய்து வருகிறாராம் ஐபி.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அழகிரி ஆதரவாளர்கள், ஸ்டாலினைப் போல அழகிரியும் கருணாநிதியின் மகன். ஸ்டாலினை ஒரு குரூப் ஆதரிப்பது போல நாங்களும் அழகிரியை ஆதரிக்கிறோம். திமுகவை வலிமைப்படுத்தத்தானே அழகிரியை கட்சியில் சேருங்கள் என்கிறோம்.
நாங்கள் என்ன இவர்களைப் போல அதிமுகவினருடன் ரகசிய டீலிங்காக வைத்து செயல்படுகிறோம்? தலைவர் ஸ்டாலினே இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஐ.பெரியசாமி போன்ற குறுநில மன்னர்களுக்கு எங்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்கிருந்து துணிச்சல் வந்தது?
கூட்டணி தொடர்பாக தலைமை மட்டுமே கருத்து கூறிவரும். இப்போது துரைமுருகன் போன்றவர்கள் பாஜகவுக்கு உதவும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
அதே பாணியில் அதிமுகவுக்கு உதவும் வகையில் எங்கள் மீது ஐ. பெரியசாமி நடவடிக்கை எடுக்கிறார். இப்படி செய்வதால் நட்டம் அவருக்குத்தான். அவரது ஆத்தூர் தொகுதியில் இருந்துதான் கணிசமான திமுகவினர் அழகிரி ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். இப்போது அனைவரையும் திமுகவில் இருந்து நீக்கிவிட்டால் இயல்பாகவே ஆத்தூர் தொகுதியை திமுக இழக்க நேரிடும்.. இனி ஆத்தூர் அதிமுகவின் கோட்டையாகிவிடும் ஆபத்து இருக்கிறது என்பதை திமுக தலைமை உணர்ந்தால் சரி என்கின்றனர். ஆக அடுத்த துரைமுருகன், ஐ. பெரியசாமி!?
- எழில் பிரதீபன்