பெண்கள், குழந்தைகள் மீது கண்ணீர்புகை குண்டு வீசிய அமெரிக்கா
திஜூவானா: பிழைப்பு தேடி அமெரிக்கா வந்த அகதிகளை கண்ணீர்புகை குண்டுகளை வீசி ராணுவம் விரட்டியடித்தது.
அமெரிக்க - மெக்சிகோ எல்லை நகரம் திஜுவானா. அங்கிருந்து சாண்டியாகோ நகர் வழியாக அமெரிக்காவில் நுழைந்துவிடலாம். வன்முறை, வறுமை காரணமாக 500க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் நுழைவதற்காக திஜூவானா நகரத்திற்கு வந்தனர். இதனால் எல்லை பகுதி மூடப்பட்டது. ராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனாலும் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியை தாண்டிச் செல்ல முற்பட்டனர். பாதுகாப்புப்படையினர் தடுத்தும் அவர்கள் தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து ராணுவம், பாதுகாப்புப்படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அகதிகளை விரட்டி அடித்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
அமெரிக்கா வளமான தேசமாக இருந்தபோதும், மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், பனாமா, கவுதமாலா ஆகியவை கடும் வறட்சியில் தவிக்கின்றன. வறுமை காரணமாக அங்கு உயிர்வாழ வழியின்றி அகதிகளாக அமெரிக்காவில் தஞ்சமடைகின்றனர். இதை எதிர்த்த அமெரிக்க ராணுவத்தின் கண்ணீர் புகை குண்டு வீச்சினால் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். ஆகவே எல்லைப்பகுதியான திஜூவானா வில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும், அவ்வாறு அகதிகளாக வருவோரின் குழந்தைகளை பிரித்த பிரச்னையில் டிரம்ப் மீது உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அந்த திட்டத்தை கைவிட்ட டிரம்ப், அகதிகள் நுழைவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.