கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் வருமான வரித்துறை கடும் சோதனை!
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் 15 மணி நேரம் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.
பிசிசிஐ ஆண்டுதோறும் டிடிஎஸ் [TDS] எனப்படும் குறைந்தபட்ச வருமானவரி பிடித்தத் தொகையை கோடிக்கணக்கில் செலுத்தி வருகிறது.
ஆனால், இந்த ஆண்டு டிடிஎஸ் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு விவரங்களை சரிபார்க்க வருமான வரித்துறையினர் பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
ஜனவரி 4ஆம் தேதி மதியம் 11 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை ஜனவரி 5ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணி வரை, சுமார் 15 மணி நேரம் நீடித்தது. முதலில் 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழு விசாரணையைத் தொடங்கியது.
இந்த சோதனையில் பிசிசிஐயின் டிடிஎஸ் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சோதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் தலைமை பொருளாதார அதிகாரி சந்தோஷ் ரங்நேகர் ஆகியோருக்கு ஜனவரி 8ஆம் தேதி (இன்று) நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையால், ஐபிஎல் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.