இவரு எம்.பி.யா இருந்திருந்தா மோடிய கிழி.. கிழின்னு கிழிச்சு நம்மள காப்பாத்தியிருப்பாரப்பா!!

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை பார்வையிட்ட வைகோ விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திறந்த வேனில் நின்று பேசினார்.

புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் புயல் சேதங்களை பார்வையிட்டு திறந்த வேனில் நின்று பேசினார். அவர் பேசியதாவது:

"கஜா புயல் டெல்டா மாவட்டங்களைப் புரட்டி விட்டது. மின்வாரிய ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக உழைத்து வருகின்றனர். அதிகாரிகள் களத்தில் குதித்து போராடி வருகின்றனர். ஏ..இயற்கையே எங்கள் மக்களை ஏன் இப்படி புரட்டிப் போடுகிறாய். கடல் சீற்றம் கொள்ளும்போதெல்லாம் எங்கள் மீனவர்கள், விவசாயிகள் வாழ்வே நாசமாகிப் போகிறதே, இந்த அப்பாவி மக்கள் மீது உனக்கென்ன கோபம்". மேலும், "விவசாயிகளே கவலைப்படாதீர்கள். தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.இந்த இயற்கைப் பேரழிவில் இருந்தும் நீங்கள் முன்னேற முடியும்" எனவும் கூறினார்.வைகோ பேசிய பேச்சு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசும், முதல்வரும் மரங்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை பன்மடங்கு உயர்த்தித் தரவேண்டும். அரசு நடத்தி வரும் பதினோரு தென்னங்கன்று வளர்ப்பு நிறுவனங்களில் இருந்து தென்னங்கன்றுகளை வாங்கி, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோப்புகளில் முற்றிலும் இலவசமாக நட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பின் திருவப்பூரில் தொடர்ந்த அவரது பயணத்தின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "எடப்பாடி அரசு, முதுகெலும்பில்லாத அரசு" என பதிலளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் "இவரு எம்.பி யா இருந்திருந்தா மோடிய கிழி..கிழின்னு கிழிச்சு நம்மள காப்பாத்தியிருப்பாரப்பா" என்றார்.

 

More News >>