துபாயில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய கப்பல் : 7 ஊழியர்கள் உயிருடன் மீட்பு

துபாயில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 7 ஊழியர்கள் கடலோர மீட்பு குழுவினரால் காப்பாற்றபட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அரேபிய கடலில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தால் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலின் அலைகள் 12 அடி வரை உயரக்கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று கடலில் பயணம் செய்து கொண்டு இருந்த கப்பலில் இருந்து உதவி வேண்டி போலீஸ் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் ராட்சத அலைகளில் சிக்கியதால் கப்பல் பழுதாகி கடலில் மூழ்கி கொண்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து அந்த கப்பல் எங்கு உள்ளது என கடலோர மீட்பு குழுவினர் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட கப்பலில் ஜி.பி.எஸ். கருவி எதுவும் பொருத்தப்படாத காரணத்தால் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கடலில் மூழ்கி கொண்டு இருந்த கப்பலை கண்டுபிடித்தனர். அப்போது கப்பலில் சிக்கிக்கொண்டு இருந்த 5 பேரை உயிருடன் பத்திரமாக படகுகளில் மீட்டனர். மேலும் கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரையும் கடலோர மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் ,உடனே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடலில் மூழ்கி கொண்டு இருந்த கப்பலையும் மீட்டு துறைமுக போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

 

More News >>