6வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக்கால் கொந்தளிக்கும் பொது மக்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுடன் ஆறாவது நாளாக தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் சிரமப்பட்டு பணிக்கு செல்வதால் எப்போது தான் இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று பொது மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் திமுக உள்பட 14 போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்றுடன் ஆறாவது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான பேருந்துகள் ஓடாததால் தினக்கூலியின் அடிப்படையில் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பேருந்துகளை ஓட்டி வருகின்றனர். இதனால், பல இடங்களில் விபத்துகள் நடந்து இருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதனால், தற்காலிக ஓட்டுனர்களால் இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் ஏர அச்சமடைகின்றனர்.

பேருந்து வேலை நிறுத்தம் ஆறாவது நாளாக தொடர்வதால், அலுவலகங்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போராட்டத்திற்கு விதித்த தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர். இருப்பினும், முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகே தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தொழிற்சங்கங்கள் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தொழிலாளர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பிவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கெடு விதித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் போக்குவரத்து தொழிறசங்கங்களுக்கு இடையே நடந்து வரும் போரில் பொது மக்கள் பலியாடாக சிக்கி உள்ளனர். எப்போது தான் இந்த பிரச்னைக்கு தீர்வு வரும் என்று கோபத்தில் பொது மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

More News >>