மத்தியபிரதேசம், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு!
மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.அதன்படி, கடந்த 12 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 73 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், அடுத்தகட்டமாக மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், போட்டியிடும் கட்சிகள் வெற்றி பெறும் முனைப்போடு கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றோடு இரு மாநிலங்களிலும் பிரசாரம் ஓய்ந்தது.
மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளும், மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளும் உள்ளன. இரு மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரையில் நடைபெறும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல்களை முன்னிட்டு, இருமாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணைநிலை ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுகின்றனர். மேலும், வாக்குப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு, அன்று மாலை மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு வைக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 7ம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், 5 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வரும் டிசம்பர் மாதம் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.