திறன்மேம்பாட்டு பயிற்சிக்குப் பின் இருமடங்கு ஊதியம்: இன்போசிஸில் அறிமுகம்

உயர் திறன் தேவைப்படும் பணிகளுக்கான பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பணியாளர்களின் ஊதியத்தை இருமடங்கு அதிகரிக்கும் திட்டத்தை இன்போசிஸ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ் ஆகும். இளநிலை பணியாளர்கள் மேற்படிப்புக்காக அல்லது கூடுதல் ஊதியத்திற்காக நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும் 'இணைப்புப் பயிற்சி' (bridge programmes) அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

புதிதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்குச் சேருவோர் பெரும்பாலும் ஆண்டுக்கு ரூ,3.5 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். சம்பள உயர்வு ஆண்டுக்கு எட்டு முதல் பத்து சதவிகிதம் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இளநிலை பணியிடங்களில் இருப்போர் விரைவாக உயர்நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், உயர்திறன் நிரல் எழுதுதல் மற்றும் வடிவமைப்பு ஆகிய பணிகளுக்கு 'இணைப்புப் பயிற்சி' அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு தற்போதைய ஊதியத்தை போல் இருமடங்கு உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும்.

டிசிஎஸ்: தேசிய அளவிலான தகுதி தேர்வு இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு டிஜிட்டல் தேர்வு நடைபெறும்.டிஜிட்டல் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வு ஒன்று நடத்தப்படும். அதன்பின்னர் ஊதிய உயர்வு வழங்கப்படும். உதாரணமாக, ஆண்டுக்கு மூன்றரை லட்சம் ஊதியம் பெற்று வந்தவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் சம்பளமாகக் கிடைக்கும்.

விப்ரோ: பணியாளர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் கோடிங் (coding) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து ஊதியம் நிர்ணயிக்கப்படும்.விப்ரோ நிறுவனத்தில் 'டர்போ' (turbo) என்ற பயிற்சி உள்ளது. இதன் மூலம் திறன் மிகுந்த பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

கன்சல்டிங் என்னும் ஆலோசனை, ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற துறைகளில் ஊழியர்களை பயிற்றுவித்து அவர்கள் நீண்ட காலம் நிறுவனத்தில் பணிபுரியும்படியான சூழ்நிலையை உருவாக்க டிசிஎஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் புதிய திட்டங்களை வகுத்துள்ளன.

400 பேருக்கு பயிற்சி

பொதுவாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்குச் சேருவோர், மூன்றாண்டுகள் கழிந்ததும் வேறு நிறுவனங்களில் வேலை தேடுதல், பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வை எதிர்பார்த்தல் அல்லது எம்பிஏ போன்ற மேற்படிப்புகளை படிக்க முனைப்பு காட்டுகின்றனர். இதுபோன்ற பணியாளர்களுக்கு தேர்வு நடத்தி மூன்று மாத பயிற்சி அளிக்கப்படும். பின்னர் செயல்முறை திட்டம் ஒன்றில் ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். இந்த நடைமுறையை வெற்றிகரமாக முடிப்போருக்கு பணி மற்றும் ஊதியத்தில் உயர்வு உண்டு."நிறுவனத்தின் உள்ளேயே இருக்கும் திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம். வேலையை விட்டு விட்டு மேற்படிப்புக்கு செல்வதற்குப் பதிலாக, இதுபோன்ற இணைப்புப் பயிற்சிகள், பணி மாற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு உரிய வாய்ப்பை உருவாக்கி தரும்," என்று இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை தலைவர் கிரிஷ் சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

More News >>