கஜா புயல் பாதிப்பு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் ஓ.பி.எஸ்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக ரூ.1 கோடி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி உருவெடுத்த கஜா புயல், கடந்த 16ம் தேதி கரையை கடந்து நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில், வீடுகளையும், விவசாயத்தையும் இழந்து மக்கள் கடும் வேதனையில் உள்ளனர். புயல் கரையை கடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதி அறிவித்துள்ள நிலையில், தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. ரூ.1 கோடிக்கான காசோலையை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.
இதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜெயலலிதா பேரவை சார்பில் ரூ.50 லட்சத்துக்காக காசோலையை முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.