ஒரு வாரத்திற்குள் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய ஆய்வு குழு தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், மக்களுக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த ஆய்வு முடிந்த நிலையில், இரண்டு நாட்களில் மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மத்திய குழு அறிக்கையை தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதை தவிர, புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் 100 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து டிசம்பர் மாதம் 6ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

More News >>