தொடரும் சீரமைப்பு பணிகள்: வேதாரண்யத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கஜா புயல் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வேதாரண்யத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி உருவெடுத்த கஜா புயல், கடந்த 16ம் தேதி கரையை கடந்து நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில், வீடுகளையும், விவசாயத்தையும் இழந்து மக்கள் கடும் வேதனையில் உள்ளனர். புயல் கரையை கடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நாகை மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.இந்நிலையில், அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் புயல் நிவாரண முகாம்காக செயல்பட்டு வருவதால், வேதாரண்யம் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.
இதேபோல், முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களிலும், புயல் நிவாரண பணி காரணமாக வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் உள்ளிட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.