தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்க கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவை திருத்தி தற்போது உத்தரவிட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்தியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை திருத்தி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதுதொடர்பான பொதுநல வழக்குடன், மத்திய அரசின் மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்பிறகு, நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை. தங்களது முந்தைய உத்தரவை மாற்றிக்கொள்ளப்படுகிறது.

தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடு. தேசிய கீதம் இசைக்கப்பட்டால் எழுந்து நிற்பதற்கு மாற்றுத்திறனாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவு தொடரும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

More News >>