காங். தேர்தல் அறிக்கை லீக்- முஸ்லிம்களுக்கு சிறப்பு சலுகைகள்!
தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான காங்., தேர்தல் அறிக்கை "லீக்" ஆனது. இதில் முஸ்லீம்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் திட்டம் அம்பலமானது.
தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களைக் கவரும் நோக்கில் ஏழு திட்டங்களை காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. இத்தேர்தல் அறிக்கை டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.
கடந்த மாதம் மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாவட்டங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (நவம்பர் 28) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், டிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான காங்., தேர்தல் அறிக்கை டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது. இதில் , முஸ்லீம்களுக்கான 7 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மசூதி மற்றும் தேவாலயங்களுக்கு இலவச மின்சாரம், அரசு ஒப்பந்தங்களில் முஸ்லீம் இளைஞர்களுக்கு சிறப்பு வாய்ப்பு, ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி, முஸ்லீம்களுக்கான பிரத்யேக உண்டு உறைவிடப் பள்ளி, சிறுபான்மையினருக்கான மருத்துவமனை, சிறுபான்மையினருக்கான சிறப்பு உருதுமொழி ஆணையம் மற்றும் மத அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கான தண்டனை ஆகிய அம்சங்கள் அதில் உள்ளன.
இத்தேர்தல் அறிக்கை தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.