ரூ5 கோடி நிவாரண நிதி: லாட்டரி சீட்டு மீதான தடையை நீக்க முயற்சியா?
கஜா புயல் நிவாரண நிதியாக லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினின் அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு ரூ5 கோடி நிவாரண நிதி கொடுக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. லாட்டரி சீட்டு விற்பனைக்கான அனுமதியை பெறவே இந்த நிவாரண நிதியை மார்ட்டின் குடும்பம் வழங்கியதா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
ஏழைகளின் வாழ்வை சூறையாடிய லாட்டரி சீட்டு விற்பனைக்கு தமிழகத்தில் தடை இருக்கிறது. அதே நேரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக தமிழகத்தில் விற்பனை செய்வதும் தொடருகிறது.
லாட்டரி தொழிலில் கொடி கட்டிப் பறந்த மார்ட்டின் மீது ஏராளமான புகார்கள் நிலுவையில் உள்ளன. மார்ட்டின் குடும்பத்தினரும் ஒவ்வொரு கட்சியாக மாறி மாறியும் பார்த்தனர். ஆனால் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசின் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ5 கோடியை கொடுத்திருக்கிறது மார்ட்டினுக்கு சொந்தமான அறக்கட்டளை. சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மார்ட்டின் குடும்பத்தினர் இந்த நிதியை கொடுத்தனர்.
கஜா புயல் நிவாரண நிதியாக அரசியல் கட்சிகளான திமுக, அதிமுகவே தலா ரூ1 கோடிதான் கொடுத்தன. சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் ரூ5 கோடியை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியிருப்பது பல கேள்விகளை எழுப்பாமல் இல்லை.
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனைக்கான அனுமதியைப் பெறும் நோக்கத்துடன்தான் மார்ட்டின் குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை நிவாரண நிதியாக வழங்கியதா? என்கிற சந்தேகத்துக்கு அனேகம் விரைவில் விடை கிடைத்துவிடும்.