டெல்லி நாடாளுமன்ற பாதையில் ஜிக்னேஷ் மேவானி போராட்டம்
தடையை மீறி நாடாளுமன்ற பாதையில் ஜிக்னேஷ் மேவானி போராட்டம் நடத்தினார், அங்கு பேரணிக்கு தடை விதித்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்தில் குஜராத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்ற தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, ‘யுவா ஹங்கர்’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தார்.
மும்பையில் அவர் நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டதால், டெல்லி காவல்துறை பேரணிக்குத் தடை விதித்திருந்தது. மேலும், நாடாளுமன்ற சாலையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.
இந்நிலையில், டெல்லிக்கு வந்த ஜிக்னேஷ், பேரணிக்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதியை தடுப்பது ஜனநாயக படுகொலை எனவும் தான் அம்பேத்கர் கொள்கைகளை பின்பற்றி நடப்பதாக”வும் கூறினார். மேலும், குஜராத்தில் தனது ஆதரவாளரை சட்டவிரோதமாக 150 நாட்கள் சிறையில் அடைத்துள்ளதாகவும் ஜிக்னேஷ் குற்றஞ்சாட்டினார்.
2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்தர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடந்துகொண்டிருந்தபோது, குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து உனா வரை 20,000 தலித் மக்களை ஒருங்கிணைத்து, மாட்டுத் தோலை வைத்திருந்ததற்காக உனா நகரில் 4 தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு எதிராக, மாபெரும் பேரணி நடைபெற்றது.
“செத்த மாட்டை இனி அப்புறப்படுத்தும் வேலையைச் செய்ய மாட்டோம்” என்று அந்த மக்கள் உறுதிமொழி ஏற்றனர். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டுவந்த மக்களின் எழுச்சியாக, அந்தப் பேரணி கருதப்பட்டது.
இந்தப் பேரணியை, 34 வயதான ஜிக்னேஷ் மேவானிதான் ஒருங்கிணைத்தார். இவர், ‘ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார். நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில், பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள வட்காம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.