சபரிமலைக்கு இருமுடி கட்டி யாத்திரை புறப்பட்ட அன்புமணி
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி யாத்திரை புறப்பட்டார் பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்கிற விவகாரம் ஓயவில்லை. இதனால் சபரிமலையில் ஒருவித பதற்றமான நிலைமை இருந்து வருகிறது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஐயப்ப பக்தர்களின் வருகையும் குறைவாகவே இருப்பதாகவே கூறப்படுகிறது. அண்மையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு ஆதரவாளர்களுடன் யாத்திரை சென்ற போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து கன்னியாகுமரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்கு இன்று புறப்பட்டார்.
முன்னதாக மனைவி செளமியாவுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டிருந்தார் அன்புமணி ராமதாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாமக வட்டாரத்தில் விசாரித்தபோது, 48 நாட்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் கடைபிடிக்கும் சம்பிரதாயங்கள் படி இருக்க வேண்டும் என்று தான் அன்புமணி நினைத்தார்.
ஆனால், பேத்தி பிறந்திருக்கும் நிலையில் சில வேண்டுதல்கள் இருந்ததால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் மாலை அணிந்தார். ஆனால், கடந்த பல மாதங்களாகவே விரதத்தில் இருப்பது போலத்தான் இருந்து வந்தார் அன்புமணி.
சபரி மலைக்கு சென்று அய்யப்பனை வழிபட்டு வந்த பிறகு முகச்சவரம் செய்வார் என எதிர்பார்க்கிறோம் " என்கின்றனர். அன்புமணி, சபரிமலைக்குச் செல்வது இதுதான் முதல்முறை.