கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டு சென்று விடுகிறேன் நம்பிய மெர்சிக்கு நடந்த சோகம்
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணை காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
குமரி மாவட்டம் தக்கலை பெரும்சிலம்பு பகுதியை சேர்ந்தவர் மெர்சி (23). இவர் வள்ளியூரில் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்தார். இதே ஜவுளிக்கடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரவீந்திரன் (31) என்ற வாலிபர் பணிபுரிந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார்.
கடையில் வேலை பார்த்த போது, மெர்சியும், ரவீந்திரனும் நட்பாக பழகி வந்துள்ளனர். மெர்சியை ஒரு தலையாக ரவீந்தரன் காதலிக்க தொடங்கியுள்ளார். இது குறித்து, மெர்சியிடம் கூறிய போது, அவர் மறுக்கவில்லை.
ரவீந்திரன் வேலையைவிட்டு நின்ற பிறகும், மெர்சியிடம் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். மெர்சி வேலைக்கு செல்லும்போதும் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பும்போதும் ரவீந்திரன் அவரை மறித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், மெர்சி அவரது காதலை ஏற்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை மெர்சிக்கு போன் செய்த ரவீந்திரன் தான் வெளியூருக்கு செல்ல இருப்பதாகவும், கடைசியாக ஒரு முறை உன்னிடம் பேசிவிட்டு சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். அதை நம்பிய மெர்சி ரவீந்திரனை பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை அருகே சந்தித்துள்ளார்.
அப்போது மீண்டும் தன்னை காதலிக்கும்படி ரவீந்திரன் மெர்சியை வற்புறுத்தினார். மெர்சி இதற்கு பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். மெர்சி மறுத்தால் அவரை கொலை செய்யும் எண்ணத்துடன் ஏற்கனவே கத்தி ஒன்றை எடுத்து வந்துள்ளார் ரவீந்திரன். மெர்சி மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியில் எடுத்து மெர்சியை சரமாரியாக குத்தினார்.
இதைக கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள், ரவீந்திரனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மெர்சியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே மெர்சி பரிதாபமாக இறந்தார்.
ரவீந்திரனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர். ''தன் காதலை ஏற்க மறுத்ததால், எனக்கு கிடைக்காத மெர்சி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது'' என்ற எண்ணத்தில் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
காதல் கொலைகளில் கடைசியாக தற்போது மெர்சி சேர்ந்துள்ளார். காதலில் பிரிவும் இருக்கத்தான் செய்யும். இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இந்த காலத்து இளைஞர்களிடம் இல்லாதது வேதனைக்குரியது.