2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வு: மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கனவோடு காத்திருக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் எனும் நுழைவு தேர்வு எழுத வேண்டும். மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வு நாடு முழுவதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடு முழுவதும் வரும் 2019ம் ஆண்டு மே மாதம் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான முறை நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தொடங்கியது.

www.ntaneet.nic.in  என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அதேபோல், இதற்கான கடைசி நாள் நவம்பர் 30ம் தேதி (நாளை) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள், கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் பொறுத்தவரையில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால், பல மாவட்டங்களை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா என்ற கவலை மாணவர்கள் உள்ளனர்.

More News >>