குழந்தையின் காலை பிடித்து தலையை ஓங்கி தரையில் அடித்தேன்.. காசிமேடு பெண் பரபரப்பு வாக்குமூலம்
பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு, பாலூட்டும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் சத்யராஜ். கட்டிடத் தொழிலாளியான இவருடைய மனைவி செலஸ்டின் (23). இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து, மீண்டும் கர்ப்பமான செலஸ்டினுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.
பிறந்து 18 நாட்களே ஆன நிலையில், கடந்த 12ம் தேதி பெண் குழந்தை திடீரென இறந்தது. குழந்தைக்கு பாலூட்டும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக செலஸ்டின் போலீசிடம் கூறினார்.
இதையடுத்து, போலீசார் குழந்தையை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கையில், குழந்தையின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே குழந்தை இறந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் செலஸ்டினிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், குழந்தை இறந்த விஷயத்தில் செலஸ்டின் நாடகமாடியது தெரியவந்தது.
விசாரணையின்போது, செலஸ்டின் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: கணவர் சத்யாராஜ் வேளச்சேரியில் கட்டிட வேலைக்கு சென்றிருந்தார். அவருடன் நானும் வேலைக்கு சென்றிருந்தேன். அப்போது தான், அவருக்கு ஏற்கனவே ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 3 வயதில் குழந்தை இருப்பது தெரியவந்தது.
இதை கேள்விப்பட்டு நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். வாழ்கையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில், மற்றொரு குழந்தையையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதற்கு பதில் குழந்தையை கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
பிறகு மனதை கல்லாக்கிக் கொண்டு குழந்தையின் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு ஓங்கி தரையில் அடித்தேன். இதில், துடிதுடித்துப்போன குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
இதன்பிறகு, குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக நாடகமாடினேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, செலஸ்டினை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.