மாற்றத்தை பேசும் அன்புமணி சபரிமலைக்கு மனைவியையும் அழைத்து செல்லாதது ஏன்? விளாசும் விசிக
பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவியையும் ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தால்தான் உண்மையான மாற்றம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக வன்னி அரசு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தான் ஏற்றுக்கொண்ட தத்துவம் தான் வழிகாட்டும் என்று சொல்வார்கள். மருத்துவர் அன்புமணி படித்தவர், அதிலும் அறிவியல் பூர்வமான மருத்துவம் படித்தவர். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று அறிவிப்பு செய்துவிட்டு அரசியலில் மாற்றம் செய்யப்போவதாக வந்தவர்.
ஆனால் எந்த அறிவியல் அணுகுமுறையையும் அவர் கையாண்டதில்லை. அவருடைய தந்தையார் மனநோயாளிராமதாசு அவர்கள் போட்ட பாதையிலேயே பயணிக்கிறார் என்பதை கவனிக்க முடிகிறது. ராமதாசை அவர் ஏற்றுக்கொண்ட இந்துத்துவ சனாதன தத்துவம் தான் இதுகாறும் வழிநடத்தி வருகிறது. அதனால் தான், சனாதனத்தின் கூறுகளான, சாதி மறுப்பு திருமணங்களை கூடாது என்று எதிர்க்கிறார்.மீறினால் படுகொலை செய்ய தூண்டுகிறார். அதுமட்டுமல்ல சனாதனத்தின் முக்கிய கூறான வெறுப்பு உணர்வை விதைத்து வருகிறார். மனித நேயத்துக்கு எதிரானது தான் சனாதனம். அதை பின்பற்றி வருகிறார் ராமதாசு.
அந்த வகையில் எந்த மாற்றமும் இல்லாமல் அன்புமணியும் அப்படியே பயணிக்கிறார். ஒரு தலைவன் வழிகாட்டுவதைத்தான் தொண்டர்களும் பின்பற்றுவார்கள். மருத்துவர் அன்புமணி அய்யப்பன் சபரிமலைக்கு மாலை அணிவித்து போவது கண்டு இனி அவரை பின்பற்றுவோர் போவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. அய்யப்பன் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன், புலியின் மீது உலா வந்தவன், காட்டுக்குள் சிறுவனாக கிடந்தவன் என்றெல்லாம் புனைவுகள் உண்டு. ஆனால் அய்யப்பனுடைய பிறப்புக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அது இந்துத்துவத்தின் நம்பிக்கை அவ்வளவு தான்.
ஆனால் படித்த அன்புமணி தனது அறிவியலை மறுத்து மூடநம்பிக்கைகளை பரப்புவதில் வழிகாட்டுகிறார். ஏற்கனவே, அறிவியலுக்கு பொருந்தாத சாதி வெறியை தூக்கிப்பிடித்து வருகிறார். இப்போது சாதியின் பங்காளியான மதவெறியையும் இருமுடிகட்டி தூக்கித்திரிகிறார்.
“பாதையில் பயணிப்பது எளிது; பாதையை உருவாக்குவது கடிது” என்று மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வார்கள். ஏற்கனவே மக்களை பீடித்திருக்கிற மூடநம்பிக்கை பாதையில் பயணிப்பது எளிது. ஆனால், மாற்றத்தை உருவாக்கப்போவதாக அறிவித்த அன்புமணி அதே பழம்பாதையில் கிழம் போல் பயணிப்பது பகுத்தறிவுக்கு- அறிவியலுக்கு ஏற்புடையதா?
மக்களை அறிவியல் ரீதியாக பண்படுத்துபவன் தான் சிறந்த தலைவன். மேலும் மேலும் தவறான பாதைக்கு தமது மக்களை கொண்டு செல்கிறார் அன்புமணி.
உண்மையிலேயே மாற்றத்தை திரு.அன்புமணி உருவாக்க நினைத்திருந்தால், சபரிமலைக்கு அவரது மனைவி சவுமியா அன்புமணிக்கும் இரு முடி கட்டி அழைத்து போயிருந்தால் நல்ல மாற்றத்துக்கு அறிகுறியாக இருந்திருக்கும். பெண்களின் வழிபாட்டு உரிமையை மீட்டதாக மாறியிருக்கும்.
உச்சநீதிமன்றத்தீர்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மதித்து செயல்படுத்தினார் என்ற பெயரையாவது எடுத்திருக்கலாம். இப்படி எதுவுமே அல்லாமல், வெறுமனே மாற்றம் முன்னேற்றம் என்று விளம்பரப்படுத்திக்கொள்வது ஏமாற்று வேலை இல்லையா திரு. அன்புமணி ?
இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.