நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்ற நிலையில், இன்னும் ஒரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கனவோடு காத்திருக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் எனும் நுழைவு தேர்வு எழுத வேண்டும். மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வு நாடு முழுவதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடு முழுவதும் வரும் 2019ம் ஆண்டு மே மாதம் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான முறை நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கான கடைசி நாள் நவம்பர் 30ம் தேதி (நாளை) என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நீட் தேர்வு எழுத வயது வரம்பு தளர்த்தக்கோரியும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கக்கோரியும் பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது. பொதுப்பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என்றும் வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஒருவாரம் நீட்டிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால், பல மாவட்டங்களை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.